Wednesday, December 16, 2009

காகம் ஒன்று வந்தது

காகம் ஒன்று வந்தது
கா கா என்றது

கிளிகள் இரண்டு வந்தன
கீ கீ என்றன

குயில்கள் மூன்று வந்தன
கூ கூ என்றன

சேவல் நான்கு வந்தன
கொக்கரக்கோ என்றன

அன்னம் ஐந்து வந்தன
அசைந்து அசைந்து நடந்தன

பருந்து ஆறு வந்தன
வட்டமிட்டு பறந்தன

கழுகு ஏழு வந்தன
கழுத்தை நீட்டி நின்றன

சிட்டு எட்டு வந்தன
எட்டி எட்டி பறந்தன

மயில்கள் ஒன்பது வந்தன
நடனம் ஆடி நின்றன

கொக்கு பத்து வந்தன
கூட்டமாக பறந்தன

Thursday, November 12, 2009

பட்டணத்தைப் பார்க்கப் போற சின்ன மாமா ...

பட்டணத்தைப் பார்க்கப் போற சின்ன மாமா
இந்த பையனையே மறந்திடாதே சின்ன மாமா

பாப்பாவுக்கு ஊதுகுழல் சின்ன மாமா
வாங்கி வர மறந்திடாதே சின்ன மாமா

அக்காவுக்கு ரப்பர் வளை சின்ன மாமா
அழகழகாய் வாங்கி வாராய் சின்ன மாமா

பிரியமுள்ள அம்மாவுக்கு சின்ன மாமா
ஒரு பெங்களூரு சேலை வேணும் சின்ன மாமா

அப்பாவுக்கு சட்டை துணி சின்ன மாமா
ஆறு கெஜம் வாங்கி வாராய் சின்ன மாமா

பல்லில்லாத பாட்டிக்கு சின்ன மாமா
ஒரு பல்வரிசை வாங்கி வாராய் சின்ன மாமா

தாத்தாவுக்கு ஊன்றி செல்ல சின்ன மாமா
ஒரு தண்டுபிடி கம்பு வேணும் சின்ன மாமா

எனக்கும் ஒரு சைக்கிள் வேணும் சின்ன மாமா
வாங்கி வர மறந்திடாதே சின்ன மாமா

சொன்னதெல்லாம் மறந்திடாதே சின்ன மாமா
ஒரு துணியைச் சுற்றி முடிச்சு போடு சின்ன மாமா

mama_song_part1.wa...



mama_song_part2.wa...

Thursday, September 3, 2009

ஒன்று...யாவர்க்கும் தலை ஒன்று

ஒன்று...
யாவர்க்கும் தலை ஒன்று

இரண்டு...
முகத்தில் கண் இரண்டு

மூன்று...
முக்காலிக்கு கால் மூன்று

நான்கு...
நாற்காலிக்கு கால் நான்கு

ஐந்து...
ஒரு கை விரல் ஐந்து

ஆறு...
ஈயின் கால் ஆறு

ஏழு...
வாரத்தில் நாள் ஏழு

எட்டு...
சிலந்திக்கு கால் எட்டு

ஒன்பது..
தானிய வகை ஒன்பது

பத்து...
இரு கை விரல் பத்து

Sunday, July 26, 2009

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம்

(என் சுட்டிப் பெண் பள்ளியில் படித்து பாடியதில் இருந்து....)

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம்
உலகம் எல்லாம் கொண்டாட்டம்

யானைக்கு மேல் ஊர்வலம்
ஓட்டகச்சிவிங்கி நாட்டியம்

குரங்கு உர் உர் பின்பாட்டு
குதூகலமான சாப்பாடு

தாலி கட்டும் நேரத்திலே
மாப்பிள்ளை பூனை காணோமாம்

வாங்கி வச்ச பாலையே
மாப்பிள்ளை பூனை குடிச்சதாம்

சத்தம் எதுவும் போடாமல்
மாப்பிள்ளை பூனை ஓடிடுச்சாம்

கடிகாரத்தின் பின்பாட்டில்
தாலி கட்ட முடியாது

திருட்டு பூனைக்கு என் பெண்ணை
திருமணம் செய்ய முடியாது
திருமணம் செய்ய முடியாது

Tuesday, June 30, 2009

எல்லாரும் ஜாலியா இருக்காங்களா?

"அரவிந்த், படி அம்மா உனக்கு பிடிச்ச முறுக்கு சுட்டுட்டு வரேன்", என்றவாறு அவன் அம்மா அடுப்படிக்குள் நுழைந்தாள்.

அரவிந்த் மெல்ல நழுவி தோட்டத்திற்குச் சென்றான். அங்கு தேனீ ஒன்று ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. "ம்... நான் ஒரு தேனீயா பொறந்திருக்கலாம். ஜாலியா சுத்திட்டு இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த். "என்ன சொன்ன? என்ன சொன்ன? என்று பறந்து வந்தது தேனீ. "ம்... நான் ஒரு தேனீயா பொறந்திருக்கலாம். ஜாலியா சுத்திட்டு இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த்.

"என்னையா ஜாலியா இருக்கேன்னு சொல்ற? நாள் பூரா பூ பூவா ஓடி தேனை சேகரிச்சு, தேன் கூட்டில் சேர்க்கணும். இதில மனுஷங்க தொல்லை வேற", என்று அலுத்துக் கொண்டது தேனீ. "இந்த தேனீக்கு வேற வேலை இல்ல" என்று எண்ணியவாறு நகர்ந்து சென்றான் அரவிந்த்.

சிட்டுக்குருவி ஒன்று அரிசி கொத்திக் கொண்டு இருந்தது. "ம்... நான் ஒரு சிட்டுக்குருவியா பொறந்திருக்கலாம். ஜாலியா பறந்துட்டு இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த். "என்ன சொன்ன? என்ன சொன்ன? என்று பறந்து வந்தது சிட்டுக்குருவி. "ம்... நான் ஒரு சிட்டுக்குருவியா பொறந்திருக்கலாம். ஜாலியா பறந்துட்டு இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த்.

"என்னையா ஜாலியா இருக்கேன்னு சொல்ற? நாள் பூரா சாப்பிட ஏதாவது கிடைக்குமானு சுத்தணும். இப்ப குஞ்சு பொறிச்சிருக்கேன். அதுகளுக்கும் உணவு எடுத்துப் போகணும். ஓய்வே இல்லை", என்று அலுத்துக் கொண்டது சிட்டுக்குருவி. "இந்த சிட்டுக்குருவிக்கு வேற வேலை இல்ல" என்று எண்ணியவாறு நகர்ந்து சென்றான் அரவிந்த்.

நிழல் பரப்பி இனிய காற்று வீசியவாறு நின்றிருந்தது வேப்பமரம் ஒன்று. அதனடியில் சுகமாக அமர்ந்தான் அரவிந்த். "ம்... நான் ஒரு மரமா பொறந்திருக்கலாம். ஜாலியா தோட்டத்தில் சும்மா இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த். "என்ன சொன்ன? என்ன சொன்ன? என்று கேட்டது மரம். "ம்... நான் ஒரு மரமா பொறந்திருக்கலாம். ஜாலியா தோட்டத்தில் சும்மா இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த்.

"என்னையா ஜாலியா இருக்கேன்னு சொல்ற? நாள் பூரா சூரிய ஓலியும், நீரும் எடுத்து உணவு தயாரிக்கணும். காற்றுக்கேற்றவாறு கிளைகளை அசைக்கணும். இதில மனுஷங்க வேற வந்து இலையைப் பிடுங்குவாங்க", என்று அலுத்துக் கொண்டது மரம்.

அரவிந்துக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவன் யாரெல்லாம் சும்மா ஜாலியாக இருக்கிறார்கள் என்று எண்ணினானோ, எல்லாருமே அவர்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள். அந்த வேலைகளைச் செய்தால் தான் அவர்களால் இருக்க முடியும். "அப்படி என்றால் நானும் என் வேலையைச் செய்ய வேண்டும்" என்று சொல்லிக் கொண்டான் அரவிந்த்.

சமத்தாகப் படித்துக் கொண்டிருந்த அரவிந்தை பார்த்து அவன் அம்மா இன்னும் இரண்டு முறுக்கு சேர்த்துக் கொடுத்தார்கள். நீங்களும் இனிமேல் ஒழுங்கா படிப்பீங்க தானே சுட்டீஸ்? அப்ப தான் அம்மா அப்பா அவங்க வேலையை ஒழுங்கா பார்க்கலாம்.

Tuesday, June 16, 2009

யாகாவாராயினும் நா காக்க...

அருண் மிகவும் வாயடிக்கும் பையன்; யார் என்ன சொன்னாலும் கேட்பதில்லை; எதிர்த்து பேசுவான், திட்டுவான், மற்றவர் மனம் நோகப் பேசுவான். ஒரு நாள் அருணை அவனது வகுப்பு ஆசிரியை அழைத்து ஒரு சின்ன பெட்டி நிறைய சிறு ஆணிகளும், ஒரு மரப்பலகையும் கொடுத்தார்கள். நீ யார் மனமேனும் நோகும்படி பேசினால், இதில் ஒரு ஆணி அடித்துவிடு என்றார்கள்.

அருணும் ஆசிரியை சொன்னது வேடிக்கை போல் தோன்றியதால் விளையாட்டாக செய்தான். ஒரே நாளில் அந்த மரப்பலகை முழுக்க ஆணிகள் நிறைந்து விட்டன. அதைப் பார்த்தவுடன் அரூணுக்கு அவமானமாக இருந்தது. தான் எத்தனை மோசமானவனாக இருக்கிறோம் என்றபடி நாவைக் கட்டுப்படுத்த மிகவும் முயற்சி செய்தான். ஒரு நாள் தன் வகுப்பு ஆசிரியையிடம் சென்று "நான் இனிமேல் யார் மனம் நோகும்படியும் பேச மாட்டேன்" என்றான். அவர்களும் மகிழ்ந்தார்கள். இனி நீ யார் மனதையும் நோகடிக்காத நாட்களில் மரப்பலகையில் உள்ள ஆணியை ஒவ்வொன்றாக எடுத்து விடு என்றார்.

அருணும் விரைவிலேயே அந்த மரப்பலகையில் இருந்த ஆணிகள் அனைத்தும் எடுத்துவிட்டான். அதை அவன் ஆசிரியையிடம் சென்று காட்டினான். அவனது ஆசிரியை அவனிடம் "ஆணி எடுத்த பின்பு இந்த மரப்பலகை நான் கொடுத்தாற் போல் உள்ளதா?" என்று வினவினார். அருண் மரப்பலகையைப் பார்த்துவிட்டு "இல்லை அம்மா, அதில் ஆணி பதிந்த தடங்கள் உள்ளன" என்றான். "அந்த தடங்களை அழிக்க முடியுமா", ஆசிரியை அவனிடம் கேட்டார். "முடியாது அம்மா", என்றான் அருண். அதற்கு ஆசிரியர் "பார்த்தாயா!!! ஆணி எடுத்த பின்பும் ஆணி பதிந்த தடங்கள் உள்ளன. அது போல் தான் இன்னா சொற்களும். அவை மனதில் நீங்கா துயரை உருவாக்கும். எனவே இனிமேல் இன்னா சொற்கள் பேசக்கூடாது. நாவைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்றார். அருணும் இப்பொழுது இன்னா சொற்களைப் பேசுவதில்லை. கீழ்வரும் குறளுக்கு அவனுக்கு நன்றாகவே பொருள் தெரியும்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

Thursday, May 7, 2009

ஒரு யானையின் கதை


இந்த கதை ஒருமுறை தொலைக்காட்சியில் ஒருவர் அழகாகக் கூறினார். என் மொழியில் அந்த கதை.

ஒரு கோயில்ல ஒரு யானை இருந்ததாம். யானை என்ன கலர்? ம். கருப்பு. அந்த யானை ரொம்ப அழகா இருக்குமாம். துதிக்கையை நீட்டி, காதை அசைச்சு, காலை தூக்கி கோயிலுக்கு வர்ற குழந்தைகளோட விளையாடுமாம். குழந்தைகளுக்கும் யானைனா ரொம்ப இஷ்டமாம். தினம் கோயிலுக்கு வந்து யானையோட விளையாடிட்டு போவாங்களாம்.

இந்த யானைக்கு ஒரே ஒரு வருத்தம், தான் கருப்பா இருக்கோம் அப்படீனு. குழந்தைகள் எல்லாம் பல வண்ணத்துல உடை உடுத்தி வர்றதைப் பார்க்கும். கிளியோட பச்சை நிறம், புறாவோட வெள்ளை நிறம், மயிலோட நீல நிறம், வாத்தோட மஞ்சள் நிறம், மாட்டோட ப்ழுப்பு நிறம்னு எல்லாரோட நிறத்தையும் பார்த்து தான் மட்டும் அப்படி இல்லையேனு ஏங்கும்.

ஒரு நாள் அது சாமிகிட்ட, "சாமி சாமி எனக்கு இந்த கருப்பு நிறம் பிடிக்கலை. வேற நிறம் தாங்க" அப்படீனு கேட்டுச்சு. உடனே சாமி, "உனக்கு என்ன நிறம் வேணும்னு கேட்டார்". அதுக்கு யானைக்கு என்ன நிறம் கேட்கறதுனு புரியலை. அது உடனே "எனக்கு எல்லா நிறமும் வேணும்" அப்படீனு கேட்டுச்சு. உடனே அது உடம்பு பூரா நிறைய வண்ணங்கள் வந்திடுச்சு. இப்ப யானை கருப்பா இல்லை, உடம்பு முழுசா பல வண்ணம் சிதறி இருந்தது.

மறுநாள் அது ஆவலோடு குழந்தைகளுக்காகக் காத்திருந்தது. குழந்தைகளும் ஆசையா யானையோட விளையாட ஓடி வந்தாங்க. ஆனால், அவங்க கருப்பு யானையைத் தேடுனாங்க, இந்த வண்ண யானையை இல்லை. இந்த யானையைப் பார்த்து பயந்து யாரும் கிட்ட வரலை. யானை எவ்வளவோ சொல்லி பார்த்துச்சு, ஆனால் குழந்தைகள் எல்லாம் பயந்து ஓடிட்டாங்க.

அப்ப தான் யானைக்கு ஒண்ணு புரிஞ்சுது. அவங்க தன்னை பழைய கருப்பு யானையா பார்த்தால் தான் ஆசையா விளையாட வருவாங்கனு. இனிமேல் நான் நானாவே இருக்கேன், மத்தவங்க மாதிரி ஆகணும்னு வேண்டாத வேலை செய்ய மாட்டேன் அப்படீனு சாமிட்ட சொல்லுச்சாம். உடனே அது பழைய யானை ஆகிடுச்சாம்.

மறுநாள் குழந்தைகள் எல்லாம் ஓடி வந்து அந்த யானையோட ஆசையா விளையாடினாங்களாம்.

Monday, May 4, 2009


(படம்: இணையம்)

எங்கள் வீட்டு கொலுவிலே
எத்தனையோ பொம்மைகள்
தங்கம் போல மின்னுதே
தக தக என்று ஜொலிக்குதே

பிள்ளையாரோடு முருகனும்
பார்வதியின் மடியிலே
கொள்ளை கொண்ட கண்ணனோ
கோபியரின் நடுவிலே

இராமரோடு சீதையும்
இலஷ்மணனும் அனுமனும்
இங்கே வந்து பாருங்கள்
வேண்டுவதைக் கேளுங்கள்...

Wednesday, April 22, 2009

புத்திமான் பலவான்

தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் படித்தேன். நல்ல நகைச்சுவையுடன் சிறு சிறு கதைகளும் நல்ல கருத்துகளும் கொண்டிருந்தது புத்தகம். பிரதாப முதலியார் தனது சரித்திரத்தை நகைச்சுவையுடன் நயம்பட கூறியிருப்பார். அதில் நான் இரசித்த பிரதாப முதலியாரின் அனுபவம் ஒன்று என் குழந்தைகளும் இரசித்ததால் "கதை நேரத்தில்" என் மொழியில்....

ஒரு வழிப்போக்கன் ஒரு ஊருக்குள் நுழைந்தான். அவனது செருப்புகள் பிய்ந்து போனதால் அங்குள்ள ஒரு செருப்பு விற்பவனிடம், "நீ எனக்கு செருப்பு தந்தால் நான் உனக்கு சந்தோஷம் தருகிறேன்", என்றான். செருப்பு விற்பவனும் செருப்பு தந்தான். வழிபோக்கன் ஒரு பணம் தந்தான். செருப்பு விற்றவன் "சந்தோஷமில்லை" என்றான். வழிபோக்கன் ஐந்து பணம் தந்தான். செருப்பு விற்றவன் "சந்தோஷமில்லை" என்றான்.இப்படியே நூறு பணம் கொடுத்தும் செருப்பு விற்றவன் "சந்தோஷமில்லை" என்றான். வழிப்போக்கன் இதற்கு மேல் என்னால் கொடுக்க முடியாது என்றான். ஆனால் செருப்பு விற்பவனோ "நீ எனக்கு சந்தோஷம் தருகிறேன் என்று கூறினாய், எனவே சந்தோஷம் கொடு", என்றான். இருவர் பிரச்னையும் தீராததால் அரசரிடம் செல்ல முடிவெடுத்தார்கள்.

அரசனிடம் போகும் வழியில் சத்திரம் ஒன்றில் தங்கினார்கள். அங்கு சிலர் சீட்டாட்டம்
ஆடினார்கள். சீட்டு ஆடும் பொழுது பந்தயம் வைத்து தோற்றவர் ஜெயித்தவருக்கு பொருள் கொடுக்குமாறும் விளையாடுவர். எனவே வழிப்போக்கன் அவர்களிடம் "என்ன பந்தயம்?" என்று வினவினான். அவர்கள் "சும்மா" என்றார்கள். வழிப்போக்கனும் பந்தயம் இல்லை என்றெண்ணி கொஞ்ச நேரம் விளையாடினான். வழிப்போக்கன் விளையாட்டில் தோற்றுப் போனான். உடனே சத்திரத்துக்காரர்கள் "சும்மா கொடு" என்று அவனைப் பிடித்துக் கொண்டார்கள். எனவே அவர்களும் அவனுடன் அரசரிடம் செல்ல சேர்ந்து கொண்டார்கள்.

போகும் வழியில் ஒரு குடிசையில் இருந்து நல்ல சமையல் வாசனை வந்தது, வழிப்போக்கன் அதன் வாசனையை இரசித்து மூச்சை உள்ளிழுத்தான். உடனே சமையற்காரன் "எனது சமையலை முகர்ந்து உன் வயிற்றை நிரப்பிக் கொண்டாய், எனக்கு பணம் தா" என்றான். அவனையும் வழிப்போக்கன் சமாதானம் செய்யாததால் அவனும் அரசனிடம் செல்ல சேர்ந்து கொண்டான்.

போகும் வழியில் குருடன் ஒருவன் வந்து "நேற்று என்னிடம் நல்ல கண்ணைக் கடன் வாங்கி குருட்டுக் கண்ணைக் கொடுத்தாயே, என் நல்ல கண்ணைத் திருப்பிக் கொடு" என்றான். அவனையும் வழிப்போக்கன் சமாதானம் செய்யாததால் அவனும் அரசனிடம் செல்ல சேர்ந்து கொண்டான். அது போல் ஒரு முடவனும் ""நேற்று என்னிடம் நல்ல காலைக் கடன் வாங்கி நொண்டிக் காலைக் கொடுத்தாயே, என் நல்ல காலைத் திருப்பிக் கொடு" என்றான். அவனையும் வழிப்போக்கன் சமாதானம் செய்யாததால் அவனும் அரசனிடம் செல்ல சேர்ந்து கொண்டான்.

எல்லோரும் அரசனிடம் வந்தார்கள். அரசன் வழக்கை விசாரித்தான். இந்த விசித்திர வழக்கை காண ஊரில் எல்லோரும் வந்தார்கள். முதலில் அரசன் செருப்பு விற்றவன் வாதத்தைக் கேட்டான். பின் அவனிடம் "நான் அரசனாக இருப்பதில் உனக்கு சந்தோஷமா?" என்றான். செருப்பு விற்றவன் இல்லையென்றா சொல்ல முடியும், "சந்தோஷம்" என்றான். உடனே அரசன் "அந்த சந்தோஷத்தை வைத்துக் கொள் , உனது பிரச்னை முடிந்தது" என்று கூறிவிட்டான்.

அடுத்து சீட்டாட்டக்காரர்களைப் பார்த்து ஒரு குவளையைக் காட்டி "இதில் என்ன இருக்கிறது?" என்று கேட்டார். அவர்களும் "ஒன்றுமில்லை, சும்மாதான் இருக்கிறது" என்றனர். "சரி, அந்த சும்மாவை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று அரசர் கூறிவிட்டார்.

பின் அவர் சமையற்காரனை விசாரித்தார். வழிப்போக்கனிடம் சில காசுகள் வாங்கி ஒரு பையில் போட்டு குலுக்கினார். சமையற்காரனிடம், "இந்த காசுகளின் சத்தம்தான் உனது சமையலின் வாசனைக்கான தொகை" என்றி தீர்ப்பளித்தார்.

பின் குருடனையும் முடவனையும் விசாரித்தார். குருடனிடம் "உன் குருட்டுக் கண்ணைக் கொடு, அவன் நல்ல கண்ணைத் தருவான்", என்றார். குருடன் "என்னால் என் குருட்டுக்கண்ணை எடுக்க முடியாது" என்றான். அரசர் "நான் எடுக்கவா " என்றார். அவன் "எனக்கு இந்த கண்ணே போதும் என்று கூறிவிட்டான்". இதே போல் முடவனிடமும் "உன் நொண்டி காலைக் கொடு, அவன் நல்ல காலைத் தருவான்" என்று கூற முடவன் "எனக்கு நொண்டி காலே போதும்" என்று கூறிவிட்டான்.

எல்லோரும் அரசனின் புத்திசாலித்தனத்தைப் புகழ்ந்தார்கள்; "புத்திமான் பலவான்" என்பது உண்மையே என்று மகிழ்ந்தார்கள்.

ட்ரஷர் ஹண்ட்

குட்டீஸ்க்கு இந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும். வயசுக்கு ஏத்த மாதிரி நாம் விளையாட்டு க்ளுஸை வச்சிக்கணும்.

எப்படி விளையாடணும்?
இப்ப நான் சின்ன குழந்தைகளுக்கு ஒரு 3,4 வயசு குழந்தைகளுக்கு எப்படி விளையாடலாம்னு சொல்றேன். அதை அப்படியே மற்ற வயசுக்காரங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கணும். முதல்ல குழந்தைகள் எல்லாம் வெளியே போகணும். நாலு வெற்றுக்காகிதம் எடுத்துக்கணும். முதல் காகிதத்தில் "டி,வி" வரைங்க. இதைக் கைல வச்சிக்கங்க. இரண்டாவது காகிததில் "தொலைபேசி" வரைங்க. இதை "டி.வி" கீழ் வச்சிடுங்க. மூணாவது காகிதத்தில் "மேசை" வரைங்க. இதை தொலைபேசிக்கு கீழ் வச்சிடுங்க. நாலவது காகிதத்தில் "ஃப்ரிட்ஜ்" வரைங்க. இதை மேசை விரிப்புக்கு கீழ் வச்சிடுங்க. இப்ப ஃப்ரிட்ஜ்க்குள்ளே ஏதாவது பரிசு பொருளோ சாக்லேட்டோ எல்லா சுட்டிகளுக்கும் வச்சிடுங்க.

குழந்தைகளை உள்ளே கூப்பிட்டு, முதல் காகிதத்தைக் காட்டுங்க. அவங்க டி.வி பார்த்து டி.வி கிட்ட போய் அடுத்த காகிதத்தை எடுக்கணும். இப்படி எடுத்து எடுத்து ஃபிரிட்ஜுக்கு வருவாங்க. ட்ரஷரை எடுத்துக்குவாங்க.

இதையே பெரிய குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது க்ளூவை மாத்தலாம். தொலைபேசினு சொல்றதுக்கு பதிலா "ட்ரிங் ட்ரிங்" என்றோ "க்ரஹாம் பெல்" என்றோ ஒரு விடுகதையாகவோ க்ளூ கொடுக்கலாம். இப்படியே எவ்வளவு க்ளூ கொடுக்க முடியுமோ அவ்வளவு நேரம் விளையாடலாம்.

செய்து பாருங்கள். சுட்டிகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த விளையாட்டு.

குண்டு குண்டு செட்டியார்




குண்டு குண்டு செட்டியார்
கொலுவிருக்கும் செட்டியார்
சுண்டல் அள்ளி தின்னுங்கள்
மெல்ல மெல்ல தூங்குங்கள்

Thursday, February 26, 2009

சின்ன சின்ன பொம்மை...

சின்ன சின்ன பொம்மை...



சின்ன சின்ன பொம்மையிது
சீருடைய பொம்மை
எனதருமை தாயாரும்
எனக்கு தந்த பொம்மை

சட்டையிட்டு, தொப்பியிட்டு
நிற்கும் இந்த பொம்மை
பொட்டும் வச்சி, பூவும் வச்சி
நிற்கும் இந்த பொம்மை

சாவிகொடுத்தால் ஓடும்
அது மணியடிச்சா தூங்கும்
நல்ல நல்ல நாட்டியங்கள்
அற்புதமாய் ஆடும்

அம்மாதந்த பொம்மையிது
சும்மா தரமாட்டேன்
சுற்றி சுற்றி வந்தாலுமே
சும்மா தரமாட்டேன்

பாட்டி சொன்ன கதை - 1

எங்கள் மாம்மையிடம் (அம்மாவின் அம்மா) கதை கேட்பது ஒரு இனிய அனுபவம். மாம்மை ஒரு கத சொல்லுங்க என்றால், "நான் பொறந்த கத சொல்லவா, வளந்த கத சொல்லவா, வாழ்ந்த கத சொல்லவா, தாழ்ந்த கத சொல்லவா" என்று மரப்பாச்சி பொம்மை சொன்னதாக கூறி ஆரம்பிக்கும் அழகே தனி.

ஒரு ஊர்ல பொன்னேங்கரதாசி-னு ஒருத்தி இருந்தாளாம். அவ ரொம்ப அழகா இருப்பாளாம், ஆனா ரொம்ப திமிர் பிடிச்சவளாம். அவ ஆட்டத்த பார்க்க ஊர் பெரிய மனுசங்க எல்லாம் பொன்னா கொட்டி கொடுப்பாகளாம். ஒரு நாளு, அவ கடத்தெருவுல போயிட்டு இருக்கறப்ப, குடியானவன் ஒருத்தன் நான் என் கெனால, பொன்னேங்கரதாசிய கண்டேன்னானாம். அவ்வளவு தான், இவ அவன புடிச்சிகிட்டு, என்ன காண எல்லாரும் பொன்னா கொடுக்கறாக, நீ என்னை சும்மா கெனால காணறியானு சொல்லி, இப்பவே எனக்கு நூறு பொன் கொடுன்னு கேக்கறா. எல்லாரும் தெகச்சுப் போய் பார்க்கறாக. அவ கேக்கறது அநியாயம்னு தெரியுது, ஆனா கேள்வி கேக்க ஆளில்ல. அந்த குடியானவன் கொஞ்சம், வெவரமான ஆளு. சரி வா கிளிட்ட நியாயத்தைக் கேப்போம்-னு போறான்.




அந்த ஊர்ல செட்டியார் கடைல ஒரு புத்திசாலி கிளி இருந்தது. ஊர்ல இருக்கறவங்க வழக்க எல்லாம் அதான் அழகா தீர்த்து வைக்கும். அது கிட்ட போய் இவனும் பிரச்னையை சொன்னான். அந்த கிளியும் ரெண்டு பக்கத்து பேச்சையும் கேட்டுச்சு. பொன்னேங்கரதாசி சொல்றது சரி தான். அவளை கெனால கண்டதுக்கு பொன்ன கொடுக்கணும்னு சொல்லுச்சி. பொன்னேங்கரதாசிக்கோ ஒரே சந்தோசம். குடியானவன் தெகச்சுப் போய்ட்டான். அவன் எங்கேனு போவான். அவ்ளோ பொன் இருந்தா அவன் ஏன் இப்படி கஷ்டப்படறான். சரி, இனி கடவுள் விட்ட வழின்னு நெனச்சான். கிளி சொல்லிச்சி, "குடியானவன்ட்ட நூறு பொன்ன வாங்கி அந்த கண்ணாடி முன்னாடி வைங்க, பொன்னேங்கரதாசி அந்த கண்ணாடில இருக்கற பொன்ன எடுத்துக்கட்டும். கெனால கண்ட காட்சிக்கு கண்ணாடில தெரியற பணம் தான் சரி" அப்படின்னுச்சு. எல்லாரும் அந்த கிளி சொன்ன தீர்ப்பு தான் சரின்னு சொன்னங்க.




பொன்னேங்கரதாசிக்கு இப்ப ஒரே கோவம். அந்த கிளிய பாத்து, நான் உன்ன குழம்பு வச்சு சாப்பிடறேனா இல்லயானு பாரு அப்படின்னு சவால் விட்டாளாம். அந்த கிளியும் , நான் உன்ன கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுத மேல ஏத்தி ஊர்கோலம் வர வைக்கறேன் பாருன்னுச்சாம். பொன்னேங்கரதாசி அப்படி இப்படி மிரட்டி நெறய காசு கொடுத்து செட்டியார்ட்ட இருந்து கிளிய வாங்கிட்டாளாம். அத கொண்டு வந்து வேலக்காரிட்ட கொடுத்து ருசியா சமைக்க சொல்லிட்டு போய்ட்டாளாம். கிளி, "ஐயோ என் நிலம இப்படி யிடுச்சேன்னு" சொல்லி, தலய தொங்க போட்டுட்டு தொப்புனு மூச்ச அடக்கிட்டு விழுந்திடுச்சாம். வேலக்காரி அது செத்துப்போயிடுச்சினு, ஒரு ஓரமா வச்சிட்டு, அருவாமனைய எடுக்க உள்ள போனாளாம். கிளி பறந்து போய் சிவன் கோயிலுக்குள்ள போயிடுச்சாம்.



அருவாமனைய எடுத்திட்டு வேலக்காரி வந்தா கிளிய காணோம். இத சொன்னா அவ என்ன கொன்னுடுவாளேனு, வேலக்காரி ஒரு கோழிக்குஞ்ச புடிச்சு கொழம்பா வச்சிட்டா. பொன்னேங்கரதாசியும் கிளினு நெனச்சிட்டு, "வெடுக், வெடுக்-னு ஆடற தலய சாப்பிடறேன், பள பள-னு மின்னுற உடம்ப சாப்பிடறேன்னு", ருசிச்சு சாப்பிட்டு தூங்கிட்டா.


மறுநாளு செஞ்ச பாவமெல்லாம் போக்க, சிவன் கோயிலுக்கு போனா. "ஐயா சிவனே, எப்ப எனக்கு உன்ன காட்டப் போற", அப்படின்னு வேண்டினா. அப்ப கர்ப்பகிரகத்தில இருந்து, பொன்னேங்கரதாசி-னு ஒரு குரல் கேட்டுச்சாம். யாரு கூப்பிடறதுனு அவ தெகச்சி போய் பாக்கறா. கர்ப்பகிரகத்தில மறஞ்சு இருந்து கிளி சொல்லுது, "நான் தான் சிவன் பேசறேன். உன் பக்திய நீ காமிச்சா உனக்கு என்ன காட்டறேன்". அவ சொல்லுறா, "சாமி எதுனாலும் சொல்லுங்க நான் செய்யறேன்". "உன்கிட்ட இருக்கற சொத்தெல்லாத்தையும் ஊர்ல ஏழ பாழகளுக்கு கொடுத்துட்டு, மொட்டை அடிச்சு, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுத மேல ஏறி ஊர்கோலமா இங்க வா, நான் ஊருக்கு முன்னாடி வந்து உன்ன ஏத்துக்கறேன்", அப்படினு கிளி சொல்லுது.



உடனே பொன்னேங்கரதாசி வீட்டுக்கு போய், குளிச்சு, சொத்தெல்லாம் ஏழைங்களுக்கு கொடுத்துட்டு, மொட்டை அடிச்சி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுத மேல ஏறி ஊர்கோலமா வந்து, சிவனே என்ன ஏத்துக்கப்பான்னாளாம். கிளியும் வெளிய வந்து, நான் சொன்னத செஞ்சிட்டேன்னுச்சாம். எல்லாரும், இந்த திமிர் பிடிச்சவளுக்கு இது தேவை தான்னாங்களாம். பொன்னேங்கரதாசி அவமானம் தாங்காம ஊர விட்டே ஓடிட்டாளாம்.

ஸ்கூலுக்கு ஏன் போகணும்?

(படங்கள்: இணையம்)

ஒரு காட்டில் ஒரு யானை இருந்ததாம். அது ஒரு நாள், வாக்கிங் போச்சாம். ஒரு முயல் பார்த்ததாம். "யானை அண்ணா, யானை அண்ணா எங்கே போறீங்க?" அப்படீனு கேட்டுச்சாம். "நான் வாக்கிங் போறேன்", அப்படீனு யானை
சொல்லுச்சாம். "நானும் வரேன்", அப்படீனு முயல், யானை மேல ஏறிக்கிச்சாம்.




முயல் யானை மேல வர்றதை பார்த்து, குரங்கு வந்துச்சாம். "யானை அண்ணா, யானை அண்ணா எங்கே போறீங்க?" அப்படீனு கேட்டுச்சாம். "நான் வாக்கிங் போறேன்", அப்படீனு யானை சொல்லுச்சாம். நானும் வரேன்", அப்படீனு குரங்கு, யானை வால்ல தொஙகிட்டு வால்தனம் பண்ணிட்டு வர ஆரம்பிச்ச்தாம்.



குரங்கு, பண்ற சேட்டையை, அணில் பார்த்துச்சாம். "யானை அண்ணா, யானை அண்ணா எங்கே போறீங்க?" அப்படீனு கேட்டுச்சாம். "நான் வாக்கிங் போறேன்", அப்படீனு யானை சொல்லுச்சாம். நானும் வரேன்", அப்படீனு அணில், யானை துதிக்கையில் ஏறி விளையாடுச்சாம்.



அப்படியே காட்டில் மயில், குயில், மான் எல்லாம் சேர்ந்து, இயற்கையை இரசிச்சிட்டே போனாங்களாம். திடீர்னு, "உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...." அப்படீனு சத்தம். பார்த்தால், சிங்கம் நின்னுச்சாம்.



"எல்லாரும் எங்க் போறீங்க", அப்படீனு சிங்கம் உறுமுச்சாம். "நாங்க வாக்கிங் போறோம்", அப்படீனு எல்லா மிருகமும் சேர்ந்து கத்துச்சாம். "யானை மேல ஏறிகிட்டு என்ன வாக்கிங்... எல்லாம் இறங்குங்க, நானும் வரேன்.." அப்படீனு சிங்கம் சொல்லிச்சாம்.




எல்லாம் கீழே இறங்கி,ஜாலியா குளத்த்து கிட்ட வந்தாங்களாம். குட்டி முயலுக்கு ஒரே தாகம். ஓடிப் போய் தண்ணில வாய் வச்சுதாம். உள்ள இருந்து ஒரு முதலை வந்துச்சாம்.




"எல்லாரும் எங்க போறீங்க" அப்படீனு முதலை மிரட்டுச்சாம். "நாங்க வாக்கிங் போறோம்", அப்படீனு எல்லா மிருகமும் சேர்ந்து கத்துச்சாம். உடனே முதலை அழ ஆரம்பிச்சதாம். பெரிய மீன் ஒண்ணு வந்துச்சாம்.



அதுவும் எல்லாரும் வாக்கிங் போறாங்கன்ன உடனே அழுதுதாம். எல்லாரும் "ஏன் அழறீங்க" அப்படீனு கேட்டாங்களாம். மீனும் முதலையும், எங்களுக்கும் வாக்கிங் வர ஆசையா இருக்கு, ஆனா நாங்க தண்ணிய விட்டு எப்படி வர்றது" அப்படீனு அழுதுதாம்.எல்லா மிருகமும் அழ ஆரம்பிச்ச்தாம்.

அப்ப யாழ் பாப்பா வந்தாளாம். "எல்லாரும் ஏன் அழறீங்க" அப்படீனு கேட்டாளாம். சிங்கம் காரணத்தை சொல்லுச்சாம். உட்னே யாழ் பாப்பா சிரிச்சாளாம், "இதுக்கா அழறீங்க? நான் ஒரு ஐடியா கொடுக்கட்டுமா?", அப்படீனு கேட்டாளாம். எல்லாரும் "என்ன என்னனு" கேட்டாங்களாம். யாழ் குட்டி சொன்னாளாம், "எல்லாரும் ஜாலியா தண்ணில குதிச்சு நீந்துவோம்". எல்லோருக்கும் சந்தோஷமாம். ஜம்முனு தண்ணில குதிச்சு விளையாடினாஙகளாம்.



யாழ் பாப்பாக்கு மட்டும் எப்படி இது தோணிச்சாம்?
யாழ் பாப்பா புத்திசாலி.

யாழ் பாப்பா ஏன் புத்திசாலி?
சிங்கம் ஸ்கூலுக்கு போகுதா? இல்ல... யானை ஸ்கூலுக்கு போகுதா? இல்ல? மீன் ஸ்கூலுக்கு போகுதா? இல்ல... யாழ் பாப்பா ஸ்கூலுக்கு போறாளா? ஆமாம். அதான் புத்திசாலியா இருக்கா..