Tuesday, March 16, 2010

குட்டிப் பாப்பா எங்கே?

குட்டிப் பாப்பா தோட்டத்துக்கு விளையாடப் போனாளாம். அதுக்கு அப்புறம் அவங்க அம்மா தேடி வந்தாங்களாம். குட்டிப்பாப்பாவைக் காணோம்னு அழுதாங்களாம். தோட்டத்தில் விளையாடிட்டு இருந்த நானியும், யானியும் அம்மாவைப் பார்த்து , கவலைப்படாதீங்க, நாங்க குட்டிப் பாப்பாவைத் தேடறோம்னு சொன்னாங்களாம்.

யானியும், நானியும் ரோசாப்பூ கிட்ட போய், "ரோசா ரோசா , குட்டிப்பாப்பா பார்த்தியா?" , அப்படீனு கேட்டாங்களாம். ரோசாப்பூ , "ம்... நான் கூட ஒரு பூ கொடுத்தேனே. ஆனால் எங்க போனானு தெரியலையே" அப்படீனுச்சாம்.






யானியும், நானியும், பட்டாம்பூச்சி தோட்டமெல்லாம் சுத்துமே, அது கிட்ட கேட்போம்னு பட்டாம்பூச்சியைத் தேடிப் போனாங்களாம். "பூ பூவா சுத்தற அழகு பட்டாம்பூச்சியே!! குட்டிப்பாப்பா பார்த்தியா?" அப்படீனு கேட்டாங்களாம். பட்டாம்பூச்சி, "ம், நான் கூட அவளோட விளையாடினேனே... ஆனால் எங்க போனானு தெரியலையே" அப்படீனுச்சாம்."




யானியும், நானியும், "காத்து தான் ஊரெல்லாம் சுத்தும் அது கிட்ட கேட்போம்னு காத்தைக் கூப்பிட்டாங்களாம். "சில்லுனு பூ வாசம் சுமந்து வரும் காத்தே! காத்தே!! குட்டிப்பாப்பா பார்த்தியா?" அப்படீனு கேட்டாங்களாம். காத்து, "ம், நான் கூட அவள் முடியைக் கலைச்சு விளையாடினேனே!!! ஒரு நிமிஷம் இருங்க எங்க இருக்கானு சுத்தி பார்த்துட்டு வந்துடறேன்!!!" அப்படீனு வேகமா போச்சாம்.

கொஞ்ச நேரம் கழிச்சு காத்து வந்து , "தோட்டம் தாண்டி ஒரு வீட்டு திண்ணையில அழகா குட்டிப்பாப்பா தூங்கிட்டு இருக்கா" அப்படீனுச்சாம். யானியும் நானியும் அவங்கம்மா கிட்ட சொன்னாங்களாம். அவங்கம்மா அங்க போனாங்களாம். அப்பதான், குட்டிப்பாப்பா எழுந்து யாரையும் காணோம்னு அழப் போனாளாம். அவங்கம்மாவைப் பர்த்ததும் சிரிச்சாளாம். "தனியா எங்கேயும் போகக் கூடாது", அப்படீனு அவங்கம்மா குட்டிப் பாப்பாவைத் தூக்கிட்டாங்களாம். யானியும் நானியும் அவளோட விளையாடிட்டு வந்தாங்களாம்

Wednesday, December 16, 2009

காகம் ஒன்று வந்தது

காகம் ஒன்று வந்தது
கா கா என்றது

கிளிகள் இரண்டு வந்தன
கீ கீ என்றன

குயில்கள் மூன்று வந்தன
கூ கூ என்றன

சேவல் நான்கு வந்தன
கொக்கரக்கோ என்றன

அன்னம் ஐந்து வந்தன
அசைந்து அசைந்து நடந்தன

பருந்து ஆறு வந்தன
வட்டமிட்டு பறந்தன

கழுகு ஏழு வந்தன
கழுத்தை நீட்டி நின்றன

சிட்டு எட்டு வந்தன
எட்டி எட்டி பறந்தன

மயில்கள் ஒன்பது வந்தன
நடனம் ஆடி நின்றன

கொக்கு பத்து வந்தன
கூட்டமாக பறந்தன

Thursday, November 12, 2009

பட்டணத்தைப் பார்க்கப் போற சின்ன மாமா ...

பட்டணத்தைப் பார்க்கப் போற சின்ன மாமா
இந்த பையனையே மறந்திடாதே சின்ன மாமா

பாப்பாவுக்கு ஊதுகுழல் சின்ன மாமா
வாங்கி வர மறந்திடாதே சின்ன மாமா

அக்காவுக்கு ரப்பர் வளை சின்ன மாமா
அழகழகாய் வாங்கி வாராய் சின்ன மாமா

பிரியமுள்ள அம்மாவுக்கு சின்ன மாமா
ஒரு பெங்களூரு சேலை வேணும் சின்ன மாமா

அப்பாவுக்கு சட்டை துணி சின்ன மாமா
ஆறு கெஜம் வாங்கி வாராய் சின்ன மாமா

பல்லில்லாத பாட்டிக்கு சின்ன மாமா
ஒரு பல்வரிசை வாங்கி வாராய் சின்ன மாமா

தாத்தாவுக்கு ஊன்றி செல்ல சின்ன மாமா
ஒரு தண்டுபிடி கம்பு வேணும் சின்ன மாமா

எனக்கும் ஒரு சைக்கிள் வேணும் சின்ன மாமா
வாங்கி வர மறந்திடாதே சின்ன மாமா

சொன்னதெல்லாம் மறந்திடாதே சின்ன மாமா
ஒரு துணியைச் சுற்றி முடிச்சு போடு சின்ன மாமா

mama_song_part1.wa...



mama_song_part2.wa...

Thursday, September 3, 2009

ஒன்று...யாவர்க்கும் தலை ஒன்று

ஒன்று...
யாவர்க்கும் தலை ஒன்று

இரண்டு...
முகத்தில் கண் இரண்டு

மூன்று...
முக்காலிக்கு கால் மூன்று

நான்கு...
நாற்காலிக்கு கால் நான்கு

ஐந்து...
ஒரு கை விரல் ஐந்து

ஆறு...
ஈயின் கால் ஆறு

ஏழு...
வாரத்தில் நாள் ஏழு

எட்டு...
சிலந்திக்கு கால் எட்டு

ஒன்பது..
தானிய வகை ஒன்பது

பத்து...
இரு கை விரல் பத்து

Sunday, July 26, 2009

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம்

(என் சுட்டிப் பெண் பள்ளியில் படித்து பாடியதில் இருந்து....)

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம்
உலகம் எல்லாம் கொண்டாட்டம்

யானைக்கு மேல் ஊர்வலம்
ஓட்டகச்சிவிங்கி நாட்டியம்

குரங்கு உர் உர் பின்பாட்டு
குதூகலமான சாப்பாடு

தாலி கட்டும் நேரத்திலே
மாப்பிள்ளை பூனை காணோமாம்

வாங்கி வச்ச பாலையே
மாப்பிள்ளை பூனை குடிச்சதாம்

சத்தம் எதுவும் போடாமல்
மாப்பிள்ளை பூனை ஓடிடுச்சாம்

கடிகாரத்தின் பின்பாட்டில்
தாலி கட்ட முடியாது

திருட்டு பூனைக்கு என் பெண்ணை
திருமணம் செய்ய முடியாது
திருமணம் செய்ய முடியாது

Tuesday, June 30, 2009

எல்லாரும் ஜாலியா இருக்காங்களா?

"அரவிந்த், படி அம்மா உனக்கு பிடிச்ச முறுக்கு சுட்டுட்டு வரேன்", என்றவாறு அவன் அம்மா அடுப்படிக்குள் நுழைந்தாள்.

அரவிந்த் மெல்ல நழுவி தோட்டத்திற்குச் சென்றான். அங்கு தேனீ ஒன்று ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. "ம்... நான் ஒரு தேனீயா பொறந்திருக்கலாம். ஜாலியா சுத்திட்டு இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த். "என்ன சொன்ன? என்ன சொன்ன? என்று பறந்து வந்தது தேனீ. "ம்... நான் ஒரு தேனீயா பொறந்திருக்கலாம். ஜாலியா சுத்திட்டு இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த்.

"என்னையா ஜாலியா இருக்கேன்னு சொல்ற? நாள் பூரா பூ பூவா ஓடி தேனை சேகரிச்சு, தேன் கூட்டில் சேர்க்கணும். இதில மனுஷங்க தொல்லை வேற", என்று அலுத்துக் கொண்டது தேனீ. "இந்த தேனீக்கு வேற வேலை இல்ல" என்று எண்ணியவாறு நகர்ந்து சென்றான் அரவிந்த்.

சிட்டுக்குருவி ஒன்று அரிசி கொத்திக் கொண்டு இருந்தது. "ம்... நான் ஒரு சிட்டுக்குருவியா பொறந்திருக்கலாம். ஜாலியா பறந்துட்டு இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த். "என்ன சொன்ன? என்ன சொன்ன? என்று பறந்து வந்தது சிட்டுக்குருவி. "ம்... நான் ஒரு சிட்டுக்குருவியா பொறந்திருக்கலாம். ஜாலியா பறந்துட்டு இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த்.

"என்னையா ஜாலியா இருக்கேன்னு சொல்ற? நாள் பூரா சாப்பிட ஏதாவது கிடைக்குமானு சுத்தணும். இப்ப குஞ்சு பொறிச்சிருக்கேன். அதுகளுக்கும் உணவு எடுத்துப் போகணும். ஓய்வே இல்லை", என்று அலுத்துக் கொண்டது சிட்டுக்குருவி. "இந்த சிட்டுக்குருவிக்கு வேற வேலை இல்ல" என்று எண்ணியவாறு நகர்ந்து சென்றான் அரவிந்த்.

நிழல் பரப்பி இனிய காற்று வீசியவாறு நின்றிருந்தது வேப்பமரம் ஒன்று. அதனடியில் சுகமாக அமர்ந்தான் அரவிந்த். "ம்... நான் ஒரு மரமா பொறந்திருக்கலாம். ஜாலியா தோட்டத்தில் சும்மா இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த். "என்ன சொன்ன? என்ன சொன்ன? என்று கேட்டது மரம். "ம்... நான் ஒரு மரமா பொறந்திருக்கலாம். ஜாலியா தோட்டத்தில் சும்மா இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த்.

"என்னையா ஜாலியா இருக்கேன்னு சொல்ற? நாள் பூரா சூரிய ஓலியும், நீரும் எடுத்து உணவு தயாரிக்கணும். காற்றுக்கேற்றவாறு கிளைகளை அசைக்கணும். இதில மனுஷங்க வேற வந்து இலையைப் பிடுங்குவாங்க", என்று அலுத்துக் கொண்டது மரம்.

அரவிந்துக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவன் யாரெல்லாம் சும்மா ஜாலியாக இருக்கிறார்கள் என்று எண்ணினானோ, எல்லாருமே அவர்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள். அந்த வேலைகளைச் செய்தால் தான் அவர்களால் இருக்க முடியும். "அப்படி என்றால் நானும் என் வேலையைச் செய்ய வேண்டும்" என்று சொல்லிக் கொண்டான் அரவிந்த்.

சமத்தாகப் படித்துக் கொண்டிருந்த அரவிந்தை பார்த்து அவன் அம்மா இன்னும் இரண்டு முறுக்கு சேர்த்துக் கொடுத்தார்கள். நீங்களும் இனிமேல் ஒழுங்கா படிப்பீங்க தானே சுட்டீஸ்? அப்ப தான் அம்மா அப்பா அவங்க வேலையை ஒழுங்கா பார்க்கலாம்.

Tuesday, June 16, 2009

யாகாவாராயினும் நா காக்க...

அருண் மிகவும் வாயடிக்கும் பையன்; யார் என்ன சொன்னாலும் கேட்பதில்லை; எதிர்த்து பேசுவான், திட்டுவான், மற்றவர் மனம் நோகப் பேசுவான். ஒரு நாள் அருணை அவனது வகுப்பு ஆசிரியை அழைத்து ஒரு சின்ன பெட்டி நிறைய சிறு ஆணிகளும், ஒரு மரப்பலகையும் கொடுத்தார்கள். நீ யார் மனமேனும் நோகும்படி பேசினால், இதில் ஒரு ஆணி அடித்துவிடு என்றார்கள்.

அருணும் ஆசிரியை சொன்னது வேடிக்கை போல் தோன்றியதால் விளையாட்டாக செய்தான். ஒரே நாளில் அந்த மரப்பலகை முழுக்க ஆணிகள் நிறைந்து விட்டன. அதைப் பார்த்தவுடன் அரூணுக்கு அவமானமாக இருந்தது. தான் எத்தனை மோசமானவனாக இருக்கிறோம் என்றபடி நாவைக் கட்டுப்படுத்த மிகவும் முயற்சி செய்தான். ஒரு நாள் தன் வகுப்பு ஆசிரியையிடம் சென்று "நான் இனிமேல் யார் மனம் நோகும்படியும் பேச மாட்டேன்" என்றான். அவர்களும் மகிழ்ந்தார்கள். இனி நீ யார் மனதையும் நோகடிக்காத நாட்களில் மரப்பலகையில் உள்ள ஆணியை ஒவ்வொன்றாக எடுத்து விடு என்றார்.

அருணும் விரைவிலேயே அந்த மரப்பலகையில் இருந்த ஆணிகள் அனைத்தும் எடுத்துவிட்டான். அதை அவன் ஆசிரியையிடம் சென்று காட்டினான். அவனது ஆசிரியை அவனிடம் "ஆணி எடுத்த பின்பு இந்த மரப்பலகை நான் கொடுத்தாற் போல் உள்ளதா?" என்று வினவினார். அருண் மரப்பலகையைப் பார்த்துவிட்டு "இல்லை அம்மா, அதில் ஆணி பதிந்த தடங்கள் உள்ளன" என்றான். "அந்த தடங்களை அழிக்க முடியுமா", ஆசிரியை அவனிடம் கேட்டார். "முடியாது அம்மா", என்றான் அருண். அதற்கு ஆசிரியர் "பார்த்தாயா!!! ஆணி எடுத்த பின்பும் ஆணி பதிந்த தடங்கள் உள்ளன. அது போல் தான் இன்னா சொற்களும். அவை மனதில் நீங்கா துயரை உருவாக்கும். எனவே இனிமேல் இன்னா சொற்கள் பேசக்கூடாது. நாவைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்றார். அருணும் இப்பொழுது இன்னா சொற்களைப் பேசுவதில்லை. கீழ்வரும் குறளுக்கு அவனுக்கு நன்றாகவே பொருள் தெரியும்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.