Tuesday, June 30, 2009

எல்லாரும் ஜாலியா இருக்காங்களா?

"அரவிந்த், படி அம்மா உனக்கு பிடிச்ச முறுக்கு சுட்டுட்டு வரேன்", என்றவாறு அவன் அம்மா அடுப்படிக்குள் நுழைந்தாள்.

அரவிந்த் மெல்ல நழுவி தோட்டத்திற்குச் சென்றான். அங்கு தேனீ ஒன்று ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. "ம்... நான் ஒரு தேனீயா பொறந்திருக்கலாம். ஜாலியா சுத்திட்டு இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த். "என்ன சொன்ன? என்ன சொன்ன? என்று பறந்து வந்தது தேனீ. "ம்... நான் ஒரு தேனீயா பொறந்திருக்கலாம். ஜாலியா சுத்திட்டு இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த்.

"என்னையா ஜாலியா இருக்கேன்னு சொல்ற? நாள் பூரா பூ பூவா ஓடி தேனை சேகரிச்சு, தேன் கூட்டில் சேர்க்கணும். இதில மனுஷங்க தொல்லை வேற", என்று அலுத்துக் கொண்டது தேனீ. "இந்த தேனீக்கு வேற வேலை இல்ல" என்று எண்ணியவாறு நகர்ந்து சென்றான் அரவிந்த்.

சிட்டுக்குருவி ஒன்று அரிசி கொத்திக் கொண்டு இருந்தது. "ம்... நான் ஒரு சிட்டுக்குருவியா பொறந்திருக்கலாம். ஜாலியா பறந்துட்டு இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த். "என்ன சொன்ன? என்ன சொன்ன? என்று பறந்து வந்தது சிட்டுக்குருவி. "ம்... நான் ஒரு சிட்டுக்குருவியா பொறந்திருக்கலாம். ஜாலியா பறந்துட்டு இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த்.

"என்னையா ஜாலியா இருக்கேன்னு சொல்ற? நாள் பூரா சாப்பிட ஏதாவது கிடைக்குமானு சுத்தணும். இப்ப குஞ்சு பொறிச்சிருக்கேன். அதுகளுக்கும் உணவு எடுத்துப் போகணும். ஓய்வே இல்லை", என்று அலுத்துக் கொண்டது சிட்டுக்குருவி. "இந்த சிட்டுக்குருவிக்கு வேற வேலை இல்ல" என்று எண்ணியவாறு நகர்ந்து சென்றான் அரவிந்த்.

நிழல் பரப்பி இனிய காற்று வீசியவாறு நின்றிருந்தது வேப்பமரம் ஒன்று. அதனடியில் சுகமாக அமர்ந்தான் அரவிந்த். "ம்... நான் ஒரு மரமா பொறந்திருக்கலாம். ஜாலியா தோட்டத்தில் சும்மா இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த். "என்ன சொன்ன? என்ன சொன்ன? என்று கேட்டது மரம். "ம்... நான் ஒரு மரமா பொறந்திருக்கலாம். ஜாலியா தோட்டத்தில் சும்மா இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த்.

"என்னையா ஜாலியா இருக்கேன்னு சொல்ற? நாள் பூரா சூரிய ஓலியும், நீரும் எடுத்து உணவு தயாரிக்கணும். காற்றுக்கேற்றவாறு கிளைகளை அசைக்கணும். இதில மனுஷங்க வேற வந்து இலையைப் பிடுங்குவாங்க", என்று அலுத்துக் கொண்டது மரம்.

அரவிந்துக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவன் யாரெல்லாம் சும்மா ஜாலியாக இருக்கிறார்கள் என்று எண்ணினானோ, எல்லாருமே அவர்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள். அந்த வேலைகளைச் செய்தால் தான் அவர்களால் இருக்க முடியும். "அப்படி என்றால் நானும் என் வேலையைச் செய்ய வேண்டும்" என்று சொல்லிக் கொண்டான் அரவிந்த்.

சமத்தாகப் படித்துக் கொண்டிருந்த அரவிந்தை பார்த்து அவன் அம்மா இன்னும் இரண்டு முறுக்கு சேர்த்துக் கொடுத்தார்கள். நீங்களும் இனிமேல் ஒழுங்கா படிப்பீங்க தானே சுட்டீஸ்? அப்ப தான் அம்மா அப்பா அவங்க வேலையை ஒழுங்கா பார்க்கலாம்.

Tuesday, June 16, 2009

யாகாவாராயினும் நா காக்க...

அருண் மிகவும் வாயடிக்கும் பையன்; யார் என்ன சொன்னாலும் கேட்பதில்லை; எதிர்த்து பேசுவான், திட்டுவான், மற்றவர் மனம் நோகப் பேசுவான். ஒரு நாள் அருணை அவனது வகுப்பு ஆசிரியை அழைத்து ஒரு சின்ன பெட்டி நிறைய சிறு ஆணிகளும், ஒரு மரப்பலகையும் கொடுத்தார்கள். நீ யார் மனமேனும் நோகும்படி பேசினால், இதில் ஒரு ஆணி அடித்துவிடு என்றார்கள்.

அருணும் ஆசிரியை சொன்னது வேடிக்கை போல் தோன்றியதால் விளையாட்டாக செய்தான். ஒரே நாளில் அந்த மரப்பலகை முழுக்க ஆணிகள் நிறைந்து விட்டன. அதைப் பார்த்தவுடன் அரூணுக்கு அவமானமாக இருந்தது. தான் எத்தனை மோசமானவனாக இருக்கிறோம் என்றபடி நாவைக் கட்டுப்படுத்த மிகவும் முயற்சி செய்தான். ஒரு நாள் தன் வகுப்பு ஆசிரியையிடம் சென்று "நான் இனிமேல் யார் மனம் நோகும்படியும் பேச மாட்டேன்" என்றான். அவர்களும் மகிழ்ந்தார்கள். இனி நீ யார் மனதையும் நோகடிக்காத நாட்களில் மரப்பலகையில் உள்ள ஆணியை ஒவ்வொன்றாக எடுத்து விடு என்றார்.

அருணும் விரைவிலேயே அந்த மரப்பலகையில் இருந்த ஆணிகள் அனைத்தும் எடுத்துவிட்டான். அதை அவன் ஆசிரியையிடம் சென்று காட்டினான். அவனது ஆசிரியை அவனிடம் "ஆணி எடுத்த பின்பு இந்த மரப்பலகை நான் கொடுத்தாற் போல் உள்ளதா?" என்று வினவினார். அருண் மரப்பலகையைப் பார்த்துவிட்டு "இல்லை அம்மா, அதில் ஆணி பதிந்த தடங்கள் உள்ளன" என்றான். "அந்த தடங்களை அழிக்க முடியுமா", ஆசிரியை அவனிடம் கேட்டார். "முடியாது அம்மா", என்றான் அருண். அதற்கு ஆசிரியர் "பார்த்தாயா!!! ஆணி எடுத்த பின்பும் ஆணி பதிந்த தடங்கள் உள்ளன. அது போல் தான் இன்னா சொற்களும். அவை மனதில் நீங்கா துயரை உருவாக்கும். எனவே இனிமேல் இன்னா சொற்கள் பேசக்கூடாது. நாவைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்றார். அருணும் இப்பொழுது இன்னா சொற்களைப் பேசுவதில்லை. கீழ்வரும் குறளுக்கு அவனுக்கு நன்றாகவே பொருள் தெரியும்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.