Wednesday, April 22, 2009

புத்திமான் பலவான்

தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் படித்தேன். நல்ல நகைச்சுவையுடன் சிறு சிறு கதைகளும் நல்ல கருத்துகளும் கொண்டிருந்தது புத்தகம். பிரதாப முதலியார் தனது சரித்திரத்தை நகைச்சுவையுடன் நயம்பட கூறியிருப்பார். அதில் நான் இரசித்த பிரதாப முதலியாரின் அனுபவம் ஒன்று என் குழந்தைகளும் இரசித்ததால் "கதை நேரத்தில்" என் மொழியில்....

ஒரு வழிப்போக்கன் ஒரு ஊருக்குள் நுழைந்தான். அவனது செருப்புகள் பிய்ந்து போனதால் அங்குள்ள ஒரு செருப்பு விற்பவனிடம், "நீ எனக்கு செருப்பு தந்தால் நான் உனக்கு சந்தோஷம் தருகிறேன்", என்றான். செருப்பு விற்பவனும் செருப்பு தந்தான். வழிபோக்கன் ஒரு பணம் தந்தான். செருப்பு விற்றவன் "சந்தோஷமில்லை" என்றான். வழிபோக்கன் ஐந்து பணம் தந்தான். செருப்பு விற்றவன் "சந்தோஷமில்லை" என்றான்.இப்படியே நூறு பணம் கொடுத்தும் செருப்பு விற்றவன் "சந்தோஷமில்லை" என்றான். வழிப்போக்கன் இதற்கு மேல் என்னால் கொடுக்க முடியாது என்றான். ஆனால் செருப்பு விற்பவனோ "நீ எனக்கு சந்தோஷம் தருகிறேன் என்று கூறினாய், எனவே சந்தோஷம் கொடு", என்றான். இருவர் பிரச்னையும் தீராததால் அரசரிடம் செல்ல முடிவெடுத்தார்கள்.

அரசனிடம் போகும் வழியில் சத்திரம் ஒன்றில் தங்கினார்கள். அங்கு சிலர் சீட்டாட்டம்
ஆடினார்கள். சீட்டு ஆடும் பொழுது பந்தயம் வைத்து தோற்றவர் ஜெயித்தவருக்கு பொருள் கொடுக்குமாறும் விளையாடுவர். எனவே வழிப்போக்கன் அவர்களிடம் "என்ன பந்தயம்?" என்று வினவினான். அவர்கள் "சும்மா" என்றார்கள். வழிப்போக்கனும் பந்தயம் இல்லை என்றெண்ணி கொஞ்ச நேரம் விளையாடினான். வழிப்போக்கன் விளையாட்டில் தோற்றுப் போனான். உடனே சத்திரத்துக்காரர்கள் "சும்மா கொடு" என்று அவனைப் பிடித்துக் கொண்டார்கள். எனவே அவர்களும் அவனுடன் அரசரிடம் செல்ல சேர்ந்து கொண்டார்கள்.

போகும் வழியில் ஒரு குடிசையில் இருந்து நல்ல சமையல் வாசனை வந்தது, வழிப்போக்கன் அதன் வாசனையை இரசித்து மூச்சை உள்ளிழுத்தான். உடனே சமையற்காரன் "எனது சமையலை முகர்ந்து உன் வயிற்றை நிரப்பிக் கொண்டாய், எனக்கு பணம் தா" என்றான். அவனையும் வழிப்போக்கன் சமாதானம் செய்யாததால் அவனும் அரசனிடம் செல்ல சேர்ந்து கொண்டான்.

போகும் வழியில் குருடன் ஒருவன் வந்து "நேற்று என்னிடம் நல்ல கண்ணைக் கடன் வாங்கி குருட்டுக் கண்ணைக் கொடுத்தாயே, என் நல்ல கண்ணைத் திருப்பிக் கொடு" என்றான். அவனையும் வழிப்போக்கன் சமாதானம் செய்யாததால் அவனும் அரசனிடம் செல்ல சேர்ந்து கொண்டான். அது போல் ஒரு முடவனும் ""நேற்று என்னிடம் நல்ல காலைக் கடன் வாங்கி நொண்டிக் காலைக் கொடுத்தாயே, என் நல்ல காலைத் திருப்பிக் கொடு" என்றான். அவனையும் வழிப்போக்கன் சமாதானம் செய்யாததால் அவனும் அரசனிடம் செல்ல சேர்ந்து கொண்டான்.

எல்லோரும் அரசனிடம் வந்தார்கள். அரசன் வழக்கை விசாரித்தான். இந்த விசித்திர வழக்கை காண ஊரில் எல்லோரும் வந்தார்கள். முதலில் அரசன் செருப்பு விற்றவன் வாதத்தைக் கேட்டான். பின் அவனிடம் "நான் அரசனாக இருப்பதில் உனக்கு சந்தோஷமா?" என்றான். செருப்பு விற்றவன் இல்லையென்றா சொல்ல முடியும், "சந்தோஷம்" என்றான். உடனே அரசன் "அந்த சந்தோஷத்தை வைத்துக் கொள் , உனது பிரச்னை முடிந்தது" என்று கூறிவிட்டான்.

அடுத்து சீட்டாட்டக்காரர்களைப் பார்த்து ஒரு குவளையைக் காட்டி "இதில் என்ன இருக்கிறது?" என்று கேட்டார். அவர்களும் "ஒன்றுமில்லை, சும்மாதான் இருக்கிறது" என்றனர். "சரி, அந்த சும்மாவை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று அரசர் கூறிவிட்டார்.

பின் அவர் சமையற்காரனை விசாரித்தார். வழிப்போக்கனிடம் சில காசுகள் வாங்கி ஒரு பையில் போட்டு குலுக்கினார். சமையற்காரனிடம், "இந்த காசுகளின் சத்தம்தான் உனது சமையலின் வாசனைக்கான தொகை" என்றி தீர்ப்பளித்தார்.

பின் குருடனையும் முடவனையும் விசாரித்தார். குருடனிடம் "உன் குருட்டுக் கண்ணைக் கொடு, அவன் நல்ல கண்ணைத் தருவான்", என்றார். குருடன் "என்னால் என் குருட்டுக்கண்ணை எடுக்க முடியாது" என்றான். அரசர் "நான் எடுக்கவா " என்றார். அவன் "எனக்கு இந்த கண்ணே போதும் என்று கூறிவிட்டான்". இதே போல் முடவனிடமும் "உன் நொண்டி காலைக் கொடு, அவன் நல்ல காலைத் தருவான்" என்று கூற முடவன் "எனக்கு நொண்டி காலே போதும்" என்று கூறிவிட்டான்.

எல்லோரும் அரசனின் புத்திசாலித்தனத்தைப் புகழ்ந்தார்கள்; "புத்திமான் பலவான்" என்பது உண்மையே என்று மகிழ்ந்தார்கள்.

3 comments:

Unknown said...

பதிவில் இணைந்ததற்கும், ஊக்கமளிப்பதற்கும் நன்றி அமுதா. குழந்தைகளுக்கான நல்ல வலைப்பதிவுகள் இல்லாத சூழலில் உங்களுடைய சுட்டி வரவேற்கத்தக்கது.

நெறைய கதைகள் சொல்லுங்கள். ஆவலுடன் இருக்கிறேன்.

முழு பதிவுகளையும் படிக்க இயலவில்லை. நேரம் கிடைக்கும் போது படித்துவிட்டு பதிலிடுகிறேன்.

நன்றி,
கிருஷ்ணப் பிரபு

sury siva said...

புத்திர்பலம் யசோ தைர்யம் என்று அனுமனைத்துதிக்கும் ஒரு பாடல் உண்டு.

அறிவு ஒன்றுதான் ஒருவனது பலம் .தைரியம் தான் புகழைத்தரும்.

ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும்பொழுது
அதை அணுகவேண்டிய முறை, என்னென்ன வழிகள் ? என்பதை ஆராய்ந்து
ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து அவ்வழி சென்று பிரச்னையைத் தீர்ப்பதும்
வேந்தர்களது அறிவின் பரிணாமத்துக்கு எடுத்துக்காட்டு.

இன்னொரு விசயம்.
குழந்தைகள் தமது பெற்றோரைப்போல் தான் பெரும்பாலும் வாழ விரும்புகிறார்கள் என்பது
சமூக அறிவியல் வல்லுனர் கூறுவர்.
ஆகவே, எப்படி உங்கள் குழந்தைகள் இருக்கவேண்டும் என விரும்புகிறாயோ அப்படி நீ இரு
என்கிறார் ஒரு குழந்தை மன நல மருத்துவர்.

குழந்தைகள் மன நலம் சிறப்புற அமைய இது போன்ற கதைகள் சொல்தல் வேண்டும்.


அழகான கதை ஒன்றை தெளிவாக எடுத்துச்சொன்னமைக்கு
இம்முதியவனின் பாராட்டுக்கள்.

எனது குழந்தைகளுக்கான வலையில் உங்களது பதிவின் தொடர்பினைத் தருகிறேன்.
(உங்கள் அனுமதியுடன் )

சுப்பு ரத்தினம்.
ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகெட், யூ.எஸ்.ஏ.
http://ceebrospark.blogspot.com
http://vazhvuneri.blogspot.com

அமுதா said...

நன்றி கிருஷ்ணப்பிரபு
நன்றி sury சார். கண்டிப்பாக சுட்டி தரலாம். எனது குழந்தைகள் விரும்பும் பாடல், கதை, விளையாட்டுகள் எல்லா சுட்டிகளுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் பதிவிடவே இப்பக்கத்தை நான் தொடங்கியுள்ளேன். உங்கள் அறிமுகத்தில் மிக்க மகிழ்ச்சி